செய்திகள்
தூதரகத்தை தாக்கி தீ வைத்த போராட்டக்காரர்கள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை- ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

Published On 2020-01-01 05:03 GMT   |   Update On 2020-01-01 05:03 GMT
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
  • சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. 
  • ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா நிலைகள் மீது அமெரிக்க படைகள் வான்தாக்குதல்.
  •  போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பாக்தாத்:

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற துணை ராணுவ குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள கிர்குக் நகரில் அமெரிக்க படைகள் தங்கி இருந்த ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் பலியானார். அமெரிக்க படை வீரர்கள் பலரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியது.

அதனை தொடர்ந்து ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் வன்மையாக கண்டித்தது. அதேபோல் இந்த வான் தாக்குதல்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும், இது அமெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறினார்.



இந்த நிலையில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ உடையை அணிந்து வந்திருந்த ஆண்களும், பெண்களும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கொடியை கைகளில் ஏந்தி அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

‘அமெரிக்காவுக்கு மரணம்’ ‘அமெரிக்க தூதரகம் மூடப்படவேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேற பாராளுமன்றம் உடனடியாக உத்தரவிடவேண்டும் என முழங்கினர்.

போராட்டக்காரர்களில் சிலர் அமெரிக்காவின் கொடியை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். தூதரகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தெறிந்த போராட்டக்காரர்கள், கற்கள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூதரகத்துக்குள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதுமட்டும் இன்றி தூதரகத்தின் தடுப்பு சுவர்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். தூதரகத்தை மூடும்படி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அதனை தொடர்ந்து உடனடியாக அங்கு அமெரிக்க பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இந்த குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, வன்முறைப் போராட்டங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக உடனடியாக 750 வீரர்களை அமெரிக்கா அனுப்புகிறது. தேவைப்பட்டால் கூடுதல் படைகளை அனுப்பவும்  தயாராக உள்ளது. 
Tags:    

Similar News