செய்திகள்
பிரேசில் அதிபர்

குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்த பிரேசில் அதிபர்

Published On 2019-12-26 04:34 GMT   |   Update On 2019-12-26 04:34 GMT
குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகள் அனைத்தும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே படிப்படியாக எனது நினைவுகளை மீட்டெடுத்தேன் என்று பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கூறி உள்ளார்.


பிரேசிலியா:

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஆல்வொராடா மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மாளிகையில் உள்ள குளியலறைக்கு சென்ற போல்சனரோ திடீரென வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிபட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

சுமார் 10 மணி நேரம் மருத்துவர்களின் கவனிப்பில் இருந்த அவர் பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இது குறித்து போல்சனரோ நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “என் தலை தரையில் மோதியதால் நான் நேற்று என்ன செய்தேன் என்பது உட்பட பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே படிப்படியாக எனது நினைவுகளை மீட்டெடுத்தேன். தற்போது தான் நலமாக இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி” என கூறினார்.

கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது போல்சனரோ கத்தியால் குத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News