செய்திகள்
போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் பிரெக்சிட் மசோதா நிறைவேறியது

Published On 2019-12-21 04:40 GMT   |   Update On 2019-12-21 04:40 GMT
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா, பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியது.
லண்டன்:

பிரிட்டனில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க மாட்டோம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த பிரச்சாரத்தை தீவிரமாக அவர் முன்னெடுத்த நிலையில், பொதுத்தேர்தல் முடிவுகள், பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக அமைந்தன. கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைத்தது. 

அதன்பின்னர் பிரெக்சிட் தொடர்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதாவை, சில திருத்தங்களுடன், பாராளுமன்ற கீழ்சபையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



இதில், பிரேக்சிட் மசோதாவை ஆதரித்து 358 ஓட்டுக்களும், எதிராக, 234 ஒட்டுக்களும் விழுந்தன. இதையடுத்து, மசோதா 124 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, வரும் ஜனவரி மாதம் இந்த மசோதா மேல்சபையின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். மேல்சபையில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதும், ஜனவரி 31-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறும். 

எனினும், சில நிதி விவகாரங்கள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளதால், அதிகாரபூர்வமாக வெளியேற, மேலும் இரண்டு ஆண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News