செய்திகள்
பர்வேஸ் முஷரப்

முஷரப்புக்கு மரண தண்டனை - பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி

Published On 2019-12-17 16:07 GMT   |   Update On 2019-12-17 16:07 GMT
தேசத்துரோக வழக்கில் பர்வேஸ் முஷரப்பிற்கு இன்று விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பாகிஸ்தான் ஆயுதப்படைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவர் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார்.

முஷரப் அதிபராக இருந்தபோது 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி அவசர நிலையை கொண்டு வந்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் கைது செய்து அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவருக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதில் பர்வேஸ் முஷரப் தேச துரோகத்தில் ஈடுபட்டது உறுதியானதால் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முஷரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகுந்த வலியை தருகிறது. இந்த வழக்கில் சட்ட நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் மிக விரைவாக முடித்துவைக்கப்பட்டுள்ளது. 



பாகிஸ்தான் ராணுவ தளபதியாகவும், அதிபராகவும் செயல்பட்டு பல போர்களில் பங்கேற்று 40 வருடங்களுக்கு மேலாக நாட்டுக்காக சேவை செய்துள்ள நபர் நிச்சயமாக தேசத்துரோகத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார். 

நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நீதி வழங்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஆயுதப்படைகள் எதிர்பார்க்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News