செய்திகள்
உலக அழகியாக தேர்வு பெற்ற டோனி ஆன் சிங்.

உலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு

Published On 2019-12-15 07:12 GMT   |   Update On 2019-12-15 08:01 GMT
2019-க்கான உலக அழகி போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடம் பிடித்தார்.

லண்டன்:

69-வது உலக அழகி போட்டி (மிஸ்வேல்டு) லண்டனில் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் பங்கேற்றார்.

அழகிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் உடல் அழகு குறித்து ஆய்வு போன்றவை நடத்தப்பட்டன. இதன் முடிவில் 40 அழகிகள் வரிசைப்படுத்தப்பட்டனர்.

2019-ம் ஆண்டுக்கான உலக அழகி தேர்வு செய்யப்படுவதற்காக இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. லண்டனின் பிரபல நிகழ்ச்சி தொகுதிப்பாளர் பியர்ஸ் மோர்கன் தலைமை நடுவராக இருந்தார்.

40 அழகிகளில் 10 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவும் ஒருவர். இறுதிச்சுற்றில் அழகிகளின் அறிவுத்திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

இதன் முடிவில் உலக அழகியாக ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் தேர்தெடுக்கப்பட்டார். அவரிடம், உலகில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது தாய் என்று விடையளித்தார்.

பட்டம் வென்ற டோனி ஆன்னுக்கு கடந்த ஆண்டு உலக அழகி வனிசா பொன் சிடி லியான் (மெக்சிகோ) மகுடம் சூட்டினார்.

23 வயதான டோனி ஆன் சிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சுமன் ரத்தன் 3-வது இடத்தை பிடித்தார். 2-வது இடத்தை பிரான்ஸ் அழகி ஒப்லி மெசினோ பெற்றார்.

Tags:    

Similar News