செய்திகள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்

வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிருங்கள் - அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

Published On 2019-12-14 09:17 GMT   |   Update On 2019-12-14 10:29 GMT
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருவதால் இந்தியாவின் வடகிழக்கு மாநில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி:

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கலவரம் காரணமாக இந்தியா வர இருந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் தங்களது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டவர்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு காரணமான குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஐ.நா. சபை அதிருப்தி தெரிவித்துள்ளது. அதுபோல சில நாடுகளும் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக அசாம், திரிபுரா மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதன் காரணமாக பா.ஜனதாவிற்கு இந்த இரு மாநிலங்களிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News