செய்திகள்
ஷின்சோ அபே - மோடி

கவுகாத்தியில் பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் சந்திப்பு ரத்து

Published On 2019-12-13 11:14 GMT   |   Update On 2019-12-13 11:14 GMT
அசாம் மாநிலத்தில் வலுத்துவரும் கலவரத்தின் எதிரொலியாக கவுகாத்தி நகரில் வரும் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜப்பான்-இந்தியா இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இரு நாடுகளின் சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் யாமாநாஷி நகரில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உயர்மட்ட ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் வலுத்துவரும் கலவரத்தின் எதிரொலியாக கவுகாத்தி நகரில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இருநாட்டின் பிரதமர்களுக்கும் வசதியான வேறொரு தேதியில் திட்டமிட்டவாறு இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜப்பான் பிரதமர் வருகையின்போது கவுகாத்தியில் உள்ள நிலவரங்களை ஆய்வு செய்யவந்த ஜப்பான் நாட்டின் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு இந்த இடமும் நேரமும் உகந்ததாக இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News