செய்திகள்
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ மற்றும் கிரேட்டா தன்பெர்க்

பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஒரு மோசமான குழந்தை -பிரேசில் அதிபர் விமர்சனம்

Published On 2019-12-11 09:24 GMT   |   Update On 2019-12-11 09:24 GMT
ஸ்வீடன் பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஒரு அடம்பிடிக்கும் மோசமான குழந்தை என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கூறியுள்ளார்.
பிரேசிலியா:

சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து கடந்த ஆண்டு விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட கிரேட்டா தன்பெர்க் ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில், அமேசானில் பழங்குடி பிரேசிலியர்களைக் கொன்றது குறித்து கவலை தெரிவித்த கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதில், ‘சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து வனப்பகுதியைப் பாதுகாக்க முயன்றதற்காக பழங்குடி மக்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்யப்படுகிறார்கள், இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் உலகம் அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது’ என்று கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்திருந்தார். 

இதற்கு பதிலளித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, ‘அமேசான் காடுகளைப் பாதுகாப்பதால் பழங்குடி மக்கள் இறந்துவிட்டதாக கிரேட்டா கூறுகிறார். பத்திரிகைகள் இதுபோன்ற ஒரு மோசமான குழந்தைக்கு (பிர்ரால்கா) முக்கியத்துவம் கொடுப்பது வியப்பு அளிக்கிறது’ என தெரிவித்தார்.

பிர்ரால்கா என்றால் போர்த்துக்கீசிய மொழியில் அடம்பிடிக்கும் மோசமான குழந்தை என்று பொருள். 

Tags:    

Similar News