செய்திகள்
காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற காட்சி

போலீஸ் சீருடையில் ஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 5 பேர் பலி

Published On 2019-12-11 07:22 GMT   |   Update On 2019-12-11 07:22 GMT
சோமாலியா தலைநகரில் போலீஸ் சீருடையில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மொகடிஷு:

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் எஸ்.ஒய்.எல் என்ற பிரபல ஓட்டல்  உள்ளது. இங்கு அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் பல்வேறு பிரபலங்கள் வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் ஓட்டல் பரபரப்பாக இருந்தது. 

அப்போது போலீஸ் சீருடையில் வந்த 5 பயங்கரவாதிகள், ஓட்டலில் இருந்தவர்களை சிறைப்பிடித்து, கையெறி குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து மிரட்டினர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஓட்டலை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருதரப்பினருக்குமிடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதன் முடிவில் 5 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள் தரப்பில் 3 பேரும், பாதுகாப்பு படை தரப்பில் 2 வீரர்களும் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். சுமார் 80 பேர் எந்த ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

அல்-கொய்தாவுடன் இணைந்த அல் ஷபாப் அமைப்பானது, 2011-ல் சோமாலிய தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களின் சில பகுதிகளை இன்னும் அந்த அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், தலைநகரில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News