செய்திகள்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா

Published On 2019-12-10 19:54 GMT   |   Update On 2019-12-10 19:54 GMT
நியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
வல்லிங்டன்:

நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் எரிமலை வெடிப்பில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் இருப்பதால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



இதற்கிடையே எரிமலை வெடிப்பில் சிக்கி மாயமான 8 பேரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எரிமலை வெடிப்பில் சிக்கிய 47 பேரும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, மலேசியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவிசாரணை நடத்தப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

அதேபோல் எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்த நிகழ்வு தொடர்பாக பெரிய கேள்விகள் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். இந்த கேள்விகள் கேட்கப்பட வேண்டும், அவற்றுக்கு பதிலளிக்கப்பட வேண்டும்’’ என கூறினார்.
Tags:    

Similar News