செய்திகள்
ஈராக் போராட்டம்

ஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் - போலீஸ் உள்பட 19 பேர் பலி

Published On 2019-12-07 06:47 GMT   |   Update On 2019-12-07 06:47 GMT
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 போலீசார் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாக்தாத்:

ஈராக் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு, ஊழலை  ஒழித்தல், பொதுமக்கள் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டு போலீசார் கண்ணீர்ப்புகைக்குண்டு வீசினர். தொடர்ந்து வன்முறை  வெடித்ததால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர். அரசின் இந்த செயலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்தது.  

இதையடுத்து அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் அங்கு போராட்டங்கள் தொடர்ந்து  வருகின்றன. 

இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள்  உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.  

பாக்தாத் நகரில் உள்ள போராட்டக்காரர்களின் முக்கிய முகாமான தஹிர் சதுக்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 19  பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என செய்தி வெளியாகி உள்ளது.  

‘போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதற்கும், பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பதற்கும்  அமைதியான போராட்டங்களை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’  என ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News