செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்ப பெறும் விவகாரம் : டிரம்ப் - மெக்ரான் காரசார விவாதம்

Published On 2019-12-04 20:52 GMT   |   Update On 2019-12-04 20:52 GMT
ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்ப பெறும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கும் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
லண்டன்:

ஈராக் மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிற நாடுகளில் இருந்து வந்து ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தவர்கள். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 800-க்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக், சிரியா சிறைகளில் உள்ளனர்.

அவர்களை அந்த நாடுகள் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும் நேட்டோ படைகளின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் டிரம்பும், மெக்ரானும் சந்தித்து பேசினர். அப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்ப பெறும் விவகாரத்தில் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

மெக்ரானை பார்த்து டிரம்ப், ‘‘சில நல்ல ஐ.எஸ். போராளிகளை தரட்டுமா? என்னால் அவர்களை உங்களுக்கு தர முடியும் நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ; அவர்களை எடுத்து கொள்ளலாம்’’ என கூறினார். அதற்கு ‘‘நாம் சீரியசாக பேசலாம்’’ என மெக்ரான் பதற்றமாக பதிலளித்தார்.

மேலும் அவர், ‘‘ஐ.எஸ். இயக்கத்தை ஒழிப்பதுதான் எனது அரசுக்கு முக்கியம்’’ என கூறினார். அதனைத்தொடர்ந்து, ‘‘இதனால்தான் நீங்கள் சிறந்த அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். ஒரு கேள்விக்கு பதிலளிக்காமல் சமாளிப்பதால் சிறப்பானவர் நீங்கள். இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறேன்’’ என டிரம்ப் கூறினார்.
Tags:    

Similar News