செய்திகள்
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ

பிரேசில் அதிபரை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது

Published On 2019-12-03 06:23 GMT   |   Update On 2019-12-03 12:32 GMT
பிரேசில் நாட்டு அதிபர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை அந்நாட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரியோ டி ஜெனிரோ:

பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ பற்றி இயற்கை வளங்கள் அழிந்தன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. இயற்கை ஆர்வலர்களும் , திரைப்பட நடிகர்களும் இயற்கை வளங்கள் அழிவதை பற்றி கவலை தெரிவித்தனர். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காடுகள் புத்துயிர் பெற நிதி அளிப்பதாக அறிவித்தன.

ஹாலிவுட் நட்சத்திரமான லியானார்டோ டிகார்பியோ அமேசான் காடுகளுக்கு தீ வைக்க பணம் கொடுத்ததாக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கடந்த மாதம் 29ம் தேதி குற்றம் சாட்டினார். அதே தினம் ஜெயிர் போல்சனரோ, டிரெஸ் கோரக்கோஸ் நகரில் உள்ள ஒரு ராணுவ பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். 

இந்நிலையில், அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக அந்த ராணுவப் பள்ளியில் வேலை பார்த்த ஊழியர் ஒருவரை சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் தனது தாக்குதல் திட்டங்களை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.  இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News