செய்திகள்
சித்தரிக்கப்பட்ட படம்

குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டுக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் காத்திருப்பு

Published On 2019-11-28 06:52 GMT   |   Update On 2019-11-28 13:32 GMT
அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டு பெறுவதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் காத்திருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
வாஷிங்டன்:

கிரீன் கார்டு பற்றி அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. அங்கு 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா தரப்படுகிறது. இந்த விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கத்தக்கது.

‘எச்-1பி’ விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7 சதவீதம் பேருக்குத்தான் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக ‘கிரீன் கார்டு’ தரப்படுகிறது. அதுவும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் தரப்படுவதால், ‘கிரீன் கார்டு’க்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் கிடைக்கப்பெறும் கிரீன் கார்டு அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் இந்தியர்கள் காத்திருப்பதாக அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது 40 லட்சம் மக்கள் குடும்பத்தார் மூலம் கிடைக்கப்பெறும் கிரீன் கார்டுக்கு காத்திருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவை சேர்ந்தவர்கள் (15 லட்சம் பேர்). அதற்கு அடுத்தபடியாக இந்தியர்களும்,  சீனர்களும் உள்ளனர்.  இந்த கிரீன் கார்டுக்காக 2 லட்சத்து 27 ஆயிரம் இந்தியர்களும்,  1 லட்சத்து 80 ஆயிரம் சீனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவின் தற்போதைய குடியுரிமை விதிப்படி அமெரிக்க குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்கள் குடும்ப உறவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில வெளிநாட்டினரை சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்களாக (கிரீன் கார்டு உடையவர்கள்) அனுமதிக்கிறது.

குடும்பத்தார் மூலம் கிடைக்கப்பெறும் கிரீன் கார்டுக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க குடிமகன்களின் உடன்பிறப்புகள் ஆவர். அவர்கள் 1 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர்.

அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்தவர்களின் குழந்தைகள் 42,000. நிரந்தர குடிமகன்களை திருமணம் செய்த 2500 க்கும் மேற்பட்ட வாழ்க்கை துணைவர்கள் மற்றும் சிறு குழந்தைகளும் உள்ளனர். இதுமட்டுமல்லாது பணிநிமித்தமாக கிரீன் கார்டு வாங்க காத்திருக்கும் இந்தியர்கள் இன்னும் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News