செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி

Published On 2019-11-26 01:31 GMT   |   Update On 2019-11-26 01:31 GMT
நான் இனவெறி பிடித்தவன் அல்ல எனவும் இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம் எனவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே சீனாவின் ஆதரவாளர் என கூறப்பட்டு வருகிறது. அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 29-ந் தேதி இந்தியா வருகிறார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே ஒரு இந்திய மின்னணு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நட்பு நாடு என்ற வகையில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம். இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும் எதையும் செய்யமாட்டோம். நாங்கள் நடுநிலையான நாடாகவே இருக்க விரும்புகிறோம். வல்லரசுகளின் அதிகார போட்டிக்கு இடையே நாங்கள் நுழைய விரும்பவில்லை. நாங்கள் மிகவும் சிறிய நாடு.

நாங்கள் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். மற்ற எந்த நாடுகளின் நலனுக்கும் எதிராக அமையும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம். இந்தியா கவலைப்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்.

இந்திய பெருங்கடல் இப்போதுள்ள பூகோள அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் அனைத்து கடல் மார்க்கமும் இலங்கைக்கு அருகில் செல்கிறது. எனவே இந்த கடல்மார்க்கம் சுதந்திரமானதாகவே இருக்கும். எந்த நாடும் இந்த கடல்மார்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது.

நாங்கள் சீனாவை இங்கு முதலீடு செய்ய அழைத்தது வர்த்தக நோக்கம் மட்டுமே. இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையும் இங்கு முதலீடு செய்யும்படி அழைக்கிறோம். சீனாவை மட்டும் முதலீடு செய்யுமாறு அழைக்கவில்லை. முந்தைய சிறிசேனா அரசு ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்தது தவறு. அந்த ஒப்பந்தம் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

முதலீட்டுக்கு சிறிய கடன் கொடுப்பது என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு பொருளாதாரம், வர்த்தகம் நிறைந்த துறைமுகத்தை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாங்கள் தான் இயக்க வேண்டும். எங்களுக்கு உதவுவதற்காக முதலீடுகளை விரும்புகிறோம். ஆனால் ராணுவ நடவடிக்கைக்கோ அல்லது பூகோள அரசியல் போட்டிக்கோ இலங்கையை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதேச்சதிகாரி, இனவெறி பிடித்தவர் என உங்கள் மீது புகார் கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, “இது மிகவும் தவறான கருத்து, விடுதலை புலிகளுடன் உள்நாட்டு போர் நடைபெற்றபோது இந்த கருத்து உருவானது. நான் ஒழுக்கமான நபர், ஆனால் அதற்கு நான் இனவெறி பிடித்தவன் என்று அர்த்தமல்ல” என்றார்.
Tags:    

Similar News