செய்திகள்
ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

Published On 2019-11-20 10:59 GMT   |   Update On 2019-11-20 10:59 GMT
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார்.
கொழும்பு:

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
 
அதைத் தொடர்ந்து தனது 74-வது பிறந்த நாளையொட்டி கொழும்பு நகரில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டு விட்டு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில்,  நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வந்தால் நல்லது. ஏற்கனவே கேபினட் மந்திரிகள் பலரும் பதவி விலகி உள்ளனர். அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் என கூறினார்.



இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இன்று மாலை அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது தங்களது பதவிகளிலிருந்து ராஜினாமா செய்து அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது.
Tags:    

Similar News