செய்திகள்
கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த மலைப்பாம்பு

சீனாவில் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த 10 அடி மலைப்பாம்பு

Published On 2019-11-20 09:43 GMT   |   Update On 2019-11-20 09:43 GMT
சீனாவில் அழகு நிலையத்தின் உட்கூரையில் 10 ஆண்டுகளாக இருந்த மலைப்பாம்பு கூரையை பிய்த்துக்கொண்டு கீழே விழுந்ததில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பீஜிங்:

சீனாவின்  குவாண்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் செயல்பட்டு வருகிறது. மசாஜ், இயற்கை குளியல், ஆரோக்கிய நீரூற்று குளியல் போன்றவைகள் இங்கு உள்ளன. 

கடந்த வாரம் இந்த நிலையத்தின் உட்கூரையின் மீது ஏதோ சலசலப்பு கேட்டது. சத்தம் அதிகமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென கூரை உடைந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்தது. ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். 

இதையடுத்து காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பு பிடிப்பவர் உதவியுடன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்பு அந்த மலைப்பாம்பு மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

‘சுமார் 20 கிலோ எடை உள்ள இந்த பாம்பு  10 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்திருக்கக் கூடும். இந்த பகுதியில் அதிக அளவில் உணவகங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் பெருகி உள்ள எலிகளை சாப்பிட பாம்பு வந்திருக்கலாம்’ என பாம்பை பிடித்தவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கூரை சுவர்களில் அத்தகைய பாம்பு வாழ்வதைப் பற்றி கேள்விப்பட்டதாக அழகு நிலையத்தின் உரிமையாளர்  கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டபோது கட்டுமானத் தொழிலாளர்கள் பாம்பு ஒன்றை பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News