செய்திகள்
அமெரிக்க வாலிபர் கைது (கோப்புப் படம்)

ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆட்சேர்ப்புக்கு உதவிய அமெரிக்க வாலிபர் கைது

Published On 2019-11-20 06:45 GMT   |   Update On 2019-11-20 06:45 GMT
ஐ.எஸ் பயங்கரவாத இயக்க ஆட்சேர்ப்புக்கான தகவலை பாதுகாக்க கணினி குறியீட்டை உருவாக்கிய குற்றத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பல நாடுகளில் ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின் அழிக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் ஈராக் மற்றும் சிரியாவில் வான்தாக்குதல்களை நடத்த தொடங்கின.

சமீபத்தில், இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாக்தாதி சிரியாவில் இத்லிப் நகரில் அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதையடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது. பாக்தாதி கொல்லப்பட்டதற்கு தகுந்த பதிலடி அளிப்பதாகவும் ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆட்சேர்ப்பு தகவலை பாதுகாக்க கணினி குறியீட்டை உருவாக்கியதற்காக அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த தாமஸ் ஒசாட்சின்ஸ்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஒசாட்சின்ஸ்கியின் கணினி குறியீடானது, சமூக ஊடகங்கள் தடை செய்ய முடிவு செய்த பயங்கரவாதிகளின் தகவல்களை அந்த தளத்தில் தொடர்ந்து இருக்கவும், பரவவும், தானாக நகலெடுத்து பாதுகாக்கவும் பயன்படும். எப்.பி.ஐ அதிகாரிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் போன்று போலியாக செயல்பட்டபோது ஒசாட்சின்ஸ்கி தனது குறியீட்டை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க முயன்றதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’, என நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News