செய்திகள்
நவாஸ் ஷெரீப்

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்

Published On 2019-11-19 10:46 GMT   |   Update On 2019-11-19 10:46 GMT
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இஸ்லாமாபாத்:

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் லண்டன் சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
ஆனால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை பாகிஸ்தான் அரசு நீக்காததால் அவர் லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது. அவர் லண்டன் செல்லவேண்டுமானால் ரூ.700 கோடிக்கான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை இம்ரான்கான் அரசு விதித்தது.

அதனை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதன்மூலம் அவர் லண்டன் செல்வதில் நீடித்த சிக்கல் நீங்கியது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட விமான ஆம்புலன்சில் 7 பேருடன் நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்ட்டு சென்றுள்ளார் என அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News