உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு லாகூர் ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது.
‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்து பார்த்துவிட்டதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 10-ந் தேதி நவாஸ் ஷெரீப் தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்புடன் லண்டனுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயர் நீக்கப்படாததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது.
அதன்படி சிகிச்சைக்கு பின் நாடு திரும்புவேன் என்றும், ஊழல் வழக்குகளை எதிர்கொள்வேன் என்றும் உறுதியளித்து, ரூ.700 கோடிக்கான உறுதிமொழி பத்திரத்தில் நவாஸ் ஷெரீப் கையெழுத்திட்டால் அவர் லண்டன் செல்லலாம் என அரசு அறிவித்தது.
ஆனால், அரசின் இந்த நிபந்தனையை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். மேலும் இது சட்டவிரோதமானது என்றும், இம்ரான்கான் அரசு தனது உடல்நலத்தில் அரசியல் செய்வதாகவும் அவர் கூறி இருந்தார்.
இதற்கிடையில், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் லாகூர் ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் கடந்த வியாழக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.