செய்திகள்
எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவண்

எஸ்-400 ஏவுகணை தடுப்புக்கவண் உரிய காலத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - புதின்

Published On 2019-11-15 13:24 GMT   |   Update On 2019-11-15 13:24 GMT
எஸ்-400 ஏவுகணை தடுப்புக் கவண் இந்தியாவிடம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
பிரேசிலியா:  

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். 

இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புக்கு போடப்பட்ட இந்த ஒப்பந்ததில் முன்பணம் மற்றும் பணம் செலுத்தும் நடைமுறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். 

மாநாடு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, புதினிடம் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள எஸ்-400 ஏவுகணை தடுப்புக்கவண் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 



அதற்கு பதிலளித்த புதின், 'இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள எஸ்-400 ரக ஏவுகணை தடுப்புக்கவணை பொருத்தவரை அனைத்து நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

தடுப்பு கவணை எங்களிடம் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என இந்திய பிரதமர் மோடி என்னிடம் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. ஆகையால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இந்தியாவிடம் எஸ்-400 ஒப்படைக்கப்படும்’ என்றார்.   

ரஷியா மற்றும் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவண் ஆயுதத்தின் முதல் தொகுப்பு அடுத்த ஆண்டு இந்தியாவிடம் வழங்கப்பட உள்ளது. மேலும், அதன் அனைத்து தொகுப்புகளும் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News