செய்திகள்
ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்கின் அருணாச்சல பிரதேசம் வருகைக்கு சீனா எதிர்ப்பு

Published On 2019-11-15 11:28 GMT   |   Update On 2019-11-15 11:28 GMT
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அருணாச்சல பிரதேச சுற்றுப்பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பீஜிங்:  

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு  குறித்து முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  

அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங்கில் நேற்று நடைபெற்ற ராணுவ-பொதுமக்கள் நட்புறவு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு  உரையாற்றினார். இந்தியா- சீனா எல்லையில் உள்ள பும்லா முகாமிற்கு இன்று சென்ற ராஜ்நாத் சிங் அங்குள்ள வீரர்களுடன் சிறிது  நேரம் கலந்துரையாடினார். 

இந்நிலையில், ராஜ்நாத் சிங்கின் அருணாச்சல பிரதேச வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   



‘அருணாச்சல பிரதேசம் என அப்பகுதியை அழைப்பதை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீன நலன்களையும், அப்பகுதி  குறித்த சீன அரசின் கவனத்தையும் மதிக்க வேண்டும், எல்லை விஷயத்தை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுப்பதை  நிறுத்தி, எல்லைப் பகுதிகளில் அமைதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய தரப்பிற்கு  அறிவுறுத்துகிறோம்’ என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்தார். 

அருணாச்சல பிரதேசம் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. 3,488 கி.மீ நீளமுள்ள உண்மையான  கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஐ.சி) உள்ளடக்கிய எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகளும் இதுவரை 21 முறை  பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News