செய்திகள்
இஸ்ரேல் வான்தாக்குதல்

இஸ்ரேல் வான்தாக்குதலில் பாலஸ்தீனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

Published On 2019-11-14 19:37 GMT   |   Update On 2019-11-14 19:37 GMT
காசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர்.
காசா சிட்டி:

பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘பிஐஜே’ என்ற போராளிகள் அமைப்பின் முக்கிய தளபதியான பஹா அல் அடாவை குறிவைத்து, அவர் தங்கியிருந்த வீட்டின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் அவரும், அவரது மனைவியும் பலியாகினர். அதனை தொடர்ந்து, காசா நகரில் இருந்து பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக காசாவில் உள்ள போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 2 நாட்களாக இருதரப்பும் இடைவிடாது கடுமையாக மோதிக்கொண்டன.

இஸ்ரேல் மீது 400-க்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டன. அதே போல் இஸ்ரேல் போர் விமானங்களும் காசா நகரில் இடைவிடாது குண்டு மழை பொழிந்தன. இதில் பலர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இதன் மூலம் 2 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.இந்த நிலையில் 2 நாள் சண்டைக்கு பிறகு நேற்று இஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் எகிப்து நாடு தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல் அரசு இதனை உறுதி செய்யவில்லை.
Tags:    

Similar News