செய்திகள்
பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி

பிரிக்ஸ் தலைவர்களுடன் மோடி சந்திப்பு- வெற்றி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க புதின் அழைப்பு

Published On 2019-11-14 11:17 GMT   |   Update On 2019-11-14 11:17 GMT
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரேலிசியா:

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பின் 11-வது மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. 

புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்தார். சீன அதிபருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்ததாகவும், வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இதையடுத்து, பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'அதிபர் புதின் உடனான சந்திப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவுகளை வலுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ரஷியா இடையேயான நெருக்கமான உறவால் இருநாட்டு மக்களும் பயனடைவார்கள்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும், பிரேசில் அதிபர் போல்சோனரோவை பிரதமர் மோடி சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தார்.

இதற்கிடையில், ரஷிய அதிபருடனான சந்திப்பின் போது தங்கள் நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி நடைபெறும் 75-வது வெற்றி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார்.
Tags:    

Similar News