செய்திகள்
தாய்லாந்து போலீசார்

வழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி

Published On 2019-11-13 06:57 GMT   |   Update On 2019-11-13 06:57 GMT
தாய்லாந்தில் வழக்கு விசாரணையின்போது, 2 வழக்கறிஞர்களை சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரியை நீதிமன்ற அறையிலேயே போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பாங்காங்:

தாய்லாந்தைச் சேர்ந்த தானியன் சந்திரதிப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார் (வயது 67). இவர் மீது நிலப்பிரச்சனை தொடர்பாக பிரபல வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சந்திரதிப் மற்றும் அவரது தரப்பினர், வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர், அவரது மனைவி, உதவியாளர்கள் என அனைவரும் நேற்று காலை நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். நீதிபதி வருவதற்கு முன்னரே இருதரப்பினரிடையே கடுமையான விவாதங்கள் எழுந்தன. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த சந்திரதிப் தனது துப்பாக்கியை எடுத்து எதிர்த்தரப்பினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் வழக்கு தொடர்ந்தவர் மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது மனைவியும் மற்றொரு வழக்கறிஞரும் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு உள்ளே வந்த போலீசார், சந்திரதிப்பை அங்கேயே சுட்டுக்கொன்றனர்.  காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தின் உள்ளேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது தாய்லாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News