செய்திகள்
நவாஸ் ஷெரீப்

சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம் - பாகிஸ்தான் அரசு நிபந்தனையுடன் ஒப்புதல்

Published On 2019-11-12 16:56 GMT   |   Update On 2019-11-12 16:56 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல அந்நாட்டு அமைச்சரவை நிபந்தனையுடன் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
 
இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்காக ஜாமீன் வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே, நவாஸ் ஷெரீப் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல தடை இருப்பதால் அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர். அதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.

ஆனால், வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்காததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல அந்நாட்டு அமைச்சரவை நிபந்தனையுடன் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே அமைச்ச்ர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில், சில நிபந்தனைகளின் பேரில் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிகிச்சை முடிந்து திரும்பி வருவதற்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News