செய்திகள்
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க முடிவு

Published On 2019-11-12 10:56 GMT   |   Update On 2019-11-12 10:56 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பிடியில் இருக்கும் அமெரிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்களை மீட்க அந்த இயக்கத்தைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை விடுவிக்க உள்ளனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது. ராணுவமும் காவல்துறையும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் பயங்கரவாதிகள் பலரை கைது செய்து சிறை வைத்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தினர். அவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிணைக்கைதிகளான அமெரிக்க பல்கலைக்கழக பேராசியர்களை மீட்க  சிறையில் இருக்கும் 3 தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி நேரலையில் பேசிய கானி,  ‘3 தலிபான்கள் விடுவிக்கப்பட்டு கத்தாருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்கள் தலிபான்களால் விடுவிக்கப்படுவார்கள்’ என கூறினார். 

இது அரசு-தலிபான் இயக்கம் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்றும், பயங்கரவாதிகள் விடுதலை மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் அஷ்ரப் கானி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News