செய்திகள்
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழ் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு

Published On 2019-11-09 18:11 GMT   |   Update On 2019-11-09 18:11 GMT
அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழ் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நியூயார்க்:

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 10 நாட்கள் சென்று வந்தார்.

அதேபோல் இப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் தமிழ் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சுதாகர் தலேலா தலைமையில் உயர் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அங்குள்ள தமிழ் டாக்டர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சிகாகோ விமான நிலையத்துக்கு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், நேராக சிகாகோ நகரில் உள்ள ‘ஒக்புரூக்’ ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தங்கி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் நிகழ்ச்சியாக தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்கொள்கிறார். நாளை (10-ந்தேதி)‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019’ விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், ‘இண்டர் நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர் ஆசியா’ என்ற விருது ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது.

12-ந்தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் மாநில கவர்னர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தொழில்  முனைவோர் சார்பில் நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். 17-ம் தேதியை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சென்னை திரும்புகிறார்.

துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க நாட்டின் சிகாகோ மாநகரில் உற்சாக வரவேற்பளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து நபிகள் நாயகப் பெருமான் பிறந்த திருநாளை உவகையோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகள்!

இத்திருநாளில் சகோதரத்துவம் தழைத்திட அண்ணல் நபிகள் போதித்த அன்பு, கருணை, பரிவு, ஈகையை கடைபிடிக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News