செய்திகள்
ஈரான் அதிபர் ரவுஹானியுடன் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி

யுரேனியம் உற்பத்தியை 10 மடங்காக அதிகரித்தது ஈரான்

Published On 2019-11-05 10:03 GMT   |   Update On 2019-11-05 10:03 GMT
அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
தெக்ரான்:

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது.

அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை கட்டுக்குள் வைக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கி கொள்ளவும் வழி வகுத்தது.

ஆனால் இது அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஆண்டு அவர் அறிவித்தார். அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது.

அமெரிக்காவின் நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான், அந்த நாட்டுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தப்போவதில்லை என்று கூறியது. அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிப்பதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. 

இந்த ஒப்பந்தத்தில் மீதமுள்ள கூட்டு நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷியா ஆகியவை ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவத் தவறினால் மேலும் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தியது.

மேலும், கடந்த செப்டம்பர் 7ம் தேதி இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எடுக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவுறுத்திய 60 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை முன்னர் இருந்ததை விட பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி கூறுகையில்,

செப்டம்பர் 7 ஆம் தேதி செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புக்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியது. ஒரு நாளைக்கு 5 கிலோ அளவில் யுரேனியம் தயாரிக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு இது நாளொன்றுக்கு 450 கிராம் அளவில் இருந்தது.

ஈரானிய பொறியாளர்கள் ஐஆர் -9 இன் முன்மாதிரி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இது எங்கள் புதிய இயந்திரம் ஆகும். மேலும் ஐஆர்-எஸ் என்ற புதிய இயந்திரத்தின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரண்டு மாதங்களில் நடந்தவை. இது செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

அணுசக்தி துறையில், ஈரான் நாட்டின் வலிமையைக் காட்ட இந்த வாய்ப்பை தந்ததற்கு எதிரிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், என தெரிவித்தார்.

Tags:    

Similar News