செய்திகள்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் மற்றும் தலைவர்கள்

பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு

Published On 2019-11-02 10:27 GMT   |   Update On 2019-11-02 10:27 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும் என உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
தாஷ்கண்ட்:

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-

பயங்கரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் சமூகங்களை தொடர்ந்து சீர்குலைக்கிறது. எனவே, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, நமது வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும். தற்போதுள்ள அனைத்து சர்வதேச சட்டங்களையும் வழிமுறைகளையும் வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் ஒன்றிணைவது முக்கியம்.

நட்பு நாடுகள் எளிதில் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற சுமூகமான பொருளாதார சூழலை இந்தியா வழங்குவதற்கு தயாராக உள்ளது. 

நிலக்கரி சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தியில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் இந்தியா சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களை அறிவித்தது. டிஜிட்டல் மீடியாவில் 26 சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்கும் ஒப்புதல் அளித்தது.



இந்தியா  தனது லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News