செய்திகள்
இஸ்லாமாபாத் நகரை பேரணி நெருங்கிய காட்சி

இம்ரான் கான் ஆட்சியில் இருந்து விடுதலை கோரி இஸ்லாமாபாத்தில் மாபெரும் போராட்டம்

Published On 2019-11-01 13:16 GMT   |   Update On 2019-11-01 13:16 GMT
இம்ரான் கான் ஆட்சியில் இருந்து பாகிஸ்தானை விடுவிக்கும் நோக்கத்துடன் பிரபல மதத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினர் இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமரான பின்னர் அவரது தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்து இம்ரான் கானின் கட்சி ஆட்சியை கைப்பற்றி விட்டதாகவும் அந்நாட்டின் பிரபல மதத்தைலைவரான ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் பஸ்ல் இயக்கத்தின் தலைவரான மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

பாகிஸ்தானை இம்ரான் கான் ஆட்சியின் பிடியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி சிந்து மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணி ஒன்றை மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடங்கினார்.

சுக்குர், முல்தான், குஜ்ரன்வாலா ஆகிய பகுதிகளின் வழியாக கடந்துவந்த 'ஆஸாதி’ எனப்படும் இந்த விடுதலை பேரணிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சிந்து மாகாணத்தில் தொடங்கிய பேரணி இன்று பிற்பகல் இஸ்லாமாபாத் வந்தடைந்தது.



பேரணியில் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று மாலை இஸ்லாமாபாத் நகரில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் பிரதமர் நவாஸ்
ஷெரிப் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரான ஷாபாஸ் ஷெரிப் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

அதேவேளையில், கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான் தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார்.

விடுதலை பேரணி நடத்தும் இவர்கள் யாரிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்? என கேள்வி எழுப்பிய இம்ரான் கான் வெவ்வேறான எண்ணங்களும் குறிக்கோள்களும் கொண்ட இவர்கள் என்னை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.



பாகிஸ்தான் மக்கள் கட்சி பண விக்கத்தைப் பற்றி பேசுகிறது. தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு தெரியாது. யூதர்களின் சதி என்று  ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் பஸ்ல் தலைவர் கூவுகிறார். அவர் இருக்கும்வரை வேறு எந்த வெளிநாட்டு சதியும் நமக்கு தேவை இல்லை. இந்த பேரணியை இந்திய ஊடகங்கள் கொண்டாடி வருவதை பார்த்தால்  மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஒரு இந்தியர் என்பதுபோல் நமக்கு தெரிகிறது.

இஸ்லாம் மதத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றிய காலங்கள் எல்லாம் கடந்து விட்டன. இது புதிய பாகிஸ்தான். நீங்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் போராட்டம் நடத்துங்கள். உங்கள் கையிருப்பில் உள்ள உணவு தீர்ந்துப் போனால் நீங்கள் பட்டினியாக கிடக்க விட மாட்டோம். உங்களுக்கு தேவையானவற்றை அனுப்பி வைப்போம் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News