செய்திகள்
பிரிட்டனில் ஆரஞ்சு நிறமாக மாறிய கடல்நீர்

பிரிட்டனில் ஆரஞ்சு நிறமாக மாறிய கடல்நீர் - அலறியடித்து ஓடிய மக்கள்

Published On 2019-11-01 10:34 GMT   |   Update On 2019-11-01 10:34 GMT
பிரிட்டனில் கடற்கரை கிராமங்களில் கடல்நீர் திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
லண்டன்: 

இங்கிலாந்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது கார்ன்வால் நகரம். இதை சுற்றிலும் நிறைய கடற்கரை கிராமங்கள் உள்ளன.  இயற்கை அழகை ரசிக்கவும் கடலில் குளிப்பதற்கும் பிரிட்டனின் பல்வேறு நகரங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை  தருவது வழக்கம். 

இந்நிலையில், கடந்த வாரம் இந்த கடற்கரை பகுதிகளில் கடல்நீர் திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியது. இதனால் கடலில்  குளித்துக்கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து அலறியடித்து கரையை நோக்கி ஓடினர். 

இது குறித்து நிகழ்விடத்தில் இருந்த நபர் ஒருவர் கூறுகையில், “பிற்பகல் 12.30 மணியளவில் நாங்கள் கடலில் குளித்துக்  கொண்டிருந்தோம். திடீரென அனைவரது உடலிலும் ஜெல்லி மீன்கள் கடிப்பது போன்று உணர்ந்தோம். பயங்கர எரிச்சலும் ஏற்பட்டது. 

 

இதையடுத்து கடலின் மேற்பரப்பை பார்த்தப்போது அதிர்ச்சி அடைந்தோம். கடல் முழுவதும் ஆரஞ்சு நிறமாக ஏதோ படர்ந்து  கொண்டிருந்தது. அது கழிவு நீர் அல்ல, ஏனென்றால் எவ்விவித துர்நாற்றமும், ரசாயன வாசனையும் வீசவில்லை. உடனடியாக கடலில்  இருந்து பதறியடித்து ஓடி வந்தோம்.  

பின்பு மருத்துவமனைக்கு சென்று தோல் வியாதிகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்தோம். ஆனால் அம்மாதிரியான  விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டன,” என தெரிவித்தார். 

இதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கடற்கரையில் இருந்த  பொதுமக்களை அப்புறப்படுத்தினர். சுற்றுச்சூழல் நிறுவன அதிகாரிகள் ஆரஞ்சு நிற கடல்நீரை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதற்கான உறுதியான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.   

கார்ன்வால் போன்று போர்த்பீன், டூபோர்ட், மற்றும் சார்லஸ்டவுன் ஆகிய பகுதிகளிலும் கடல்நீர் ஆரஞ்சு மற்றும் வெளிர்சிவப்பு நிறமாக  மாறியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அப்பகுதி மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டது. 

பல கடலோர கிராமங்களில் நிகழ்ந்த இந்த நிகழ்வு குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News