செய்திகள்
மாதிரிப் படம்

‘மகிழ்ச்சி அடைய வேண்டாம் தகுந்த பதிலடி கொடுப்போம்’ -அமெரிக்காவுக்கு ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை

Published On 2019-11-01 06:57 GMT   |   Update On 2019-11-01 06:57 GMT
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் என்றும், இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ரூட்:

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). அதனால்தான் அவரை கொல்ல வேண்டும் அல்லது உயிரோடு பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறி வைத்தது. 

அவர் சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பதுங்கி இருப்பதை துப்பறிந்து கடந்த 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை அந்த இடத்தை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானார்.

இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்தார். பாக்தாதி கொல்லப்பட்ட தாக்குதல் வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டது. ஐ.எஸ் அமைப்பும் இந்த தகவலை உறுதி செய்தது.

இதையடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம், தகுந்த பதிலடி அளிப்போம் என ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஐ.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் வயதான ஒரு பைத்தியம். பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் அமெரிக்கா. உங்களுக்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்போம். பாக்தாதியின் மரணத்திற்கு பழி வாங்குவோம். அமைப்புக்காக அவர் செய்த பணிகள் என்றும் மறக்க முடியாதவை’’ என கூறியுள்ளார். 

ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அல்-குரேஷி அந்த  அமைப்பின் முன்னணி நீதிபதியாகவும், இஸ்லாமிய சட்டக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News