செய்திகள்
குருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்

குருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார்

Published On 2019-10-30 10:43 GMT   |   Update On 2019-10-30 10:43 GMT
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார்.
இஸ்லாமாபாத்:

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.

அவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக்குட்பட்ட கர்த்தார்ப்பூரில் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதையை திறந்து வைக்க நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்கிறார்.



இந்த கர்த்தார்பூர் பாதை வழியாக அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு  தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்த பாதையை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 9-ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில்,குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையிலான நினைவு நாணயத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வெளியிட்டார்.
Tags:    

Similar News