செய்திகள்
ஆஸ்திரேலியாவில் பருவநிலை ஆர்வலர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் பருவநிலை ஆர்வலர்கள் போலீசார் இடையே மோதல்- 50 பேர் கைது

Published On 2019-10-29 09:56 GMT   |   Update On 2019-10-29 09:56 GMT
ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச சுரங்க வள மாநாட்டை எதிர்த்து போராடிய பருவநிலை ஆர்வலர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிட்னி:

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள பருவநிலை  ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில், சுவீடன் நாட்டைச்  சேர்ந்த பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் பற்றிய விளைவுகள் குறித்து விளக்கினார். இதை தொடர்ந்து  பல்வேறு நாடுகளில் பருவ நிலை மாற்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற சர்வதேச சுரங்க வள மாநாட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய பருவநிலை ஆர்வலர்கள் 50 பேரை விக்டோரியா மாகாண போலீசார் கைது செய்தனர்.  

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், “சர்வதேச சுரங்க வள மாநாடு மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற  கட்டிடத்தின் நுழைவாயிலை பருவநிலை ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டும்  அவர்கள் கலைந்து செல்லவில்லை.  

வேண்டுமென்றே அவசர சேவை ஊழியர்களை தடுக்கும் நோக்கில் செயல்பட்டனர். மேலும் போலீஸ் குதிரைகளையும் தாக்கினர்.  இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக, அவர்கள் மீது பெப்பர் ஸ்ப்ரே அடிக்கப்பட்டது. 



இதனால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் 4  போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து 50 பருவநிலை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். 

அதிகாரிகள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாகவும், பயிற்சிக்கு ஏற்பவும்  இருக்கும்” என தெரிவித்தனர். 

3 நாட்கள் நடைபெறும் சர்வதேச சுரங்க வள மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த 7000 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News