செய்திகள்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி

“வில்லியமுடன் கருத்து வேறுபாடு நிலவுவது உண்மைதான்” - இளவரசர் ஹாரி ஒப்புதல்

Published On 2019-10-22 22:06 GMT   |   Update On 2019-10-22 22:06 GMT
தனக்கும் அண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதை ஒப்புக்கொண்டுள்ள இளவரசர் ஹாரி தாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கும், அவரது தம்பியும் மற்றொரு இளவரசருமான ஹாரிக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாக கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவின. எனினும் இருவரும் இது குறித்து எந்த வித விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தனக்கும் அண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதை ஒப்புக்கொண்டுள்ள இளவரசர் ஹாரி தாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஐ டி.வி.க்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் சகோதரர்கள். எப்போதுமே சகோதரர்களாக இருப்போம். இந்த தருணத்தில் நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறோம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நான் அவருடன் இருப்பேன். அவரும் அதையே செய்வார் என்பதை நான் அறிவேன்” என கூறினார்.

மேலும் அவர், “நாங்கள் இருவருமே எங்கள் வேலையில் பரபரப்பாக இருப்பதால் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதே இல்லை. சகோதரர்களான எங்களுக்குள் மகிழ்ச்சியான நாட்களும் இருக்கின்றன. கசப்பான நாட்களும் இருக்கின்றன. ஆனாலும் அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே இளவரசர் ஹாரியின் மனைவியும், இளவரசியுமான மேகன் மெர்கல், திருமணத்துக்கு பிந்தைய தனது ஓர் ஆண்டுகால வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், இங்கிலாந்து ஊடகங்களே இதற்கு காரணம் என்றும் கூறினார். 
Tags:    

Similar News