செய்திகள்
தாக்குதல் நடத்திய மர்மநபரை கைது செய்த போலீஸ்

ஆம்புலன்ஸை கடத்தி சாலையில் சென்றவர்கள் மீது மோதல் - துப்பாக்கியுடன் வந்த நபரை சுட்டுப்பிடித்த போலீஸ்

Published On 2019-10-22 14:54 GMT   |   Update On 2019-10-22 14:54 GMT
நார்வே நாட்டில் ஆம்புலன்ஸைக் கடத்தி சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ஆயுதம் ஏந்திய மர்மநபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.
ஆஸ்லோ:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. அந்த ஆம்புலன்சில் 3 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

அப்போது அங்கு துப்பாக்கி ஏந்தி வந்த மர்மநபர் மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸைக் கடத்தினார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸை வேகமாக இயக்கிய அந்த மர்ம நபர் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது வேகமாக மோதினார். 

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மக்கள் சாலையின் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கடத்தப்பட்ட ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்த முற்பட்டனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த மர்ம நபர் தனது வாகனத்தை வேகமாக இயக்கி மீண்டும் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோத முற்பட்டார். 



இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸை குறிவைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அந்த மர்ம நபர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். 

துரிதமாக செயல்பட்ட போலீசார் விபத்தை ஏற்படுத்திய அந்த நபரை கைது செய்தனர். மேலும், அதிலிருந்த மருத்துவ உதவியாளர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த மோதலில் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News