செய்திகள்
மாதிரிப் படம்

ரஷ்யா அணை உடைந்த விபத்து - 3 பேருக்கு நீதிமன்றக் காவல்

Published On 2019-10-22 08:20 GMT   |   Update On 2019-10-22 08:20 GMT
ரஷ்யாவில் அணை இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சுரங்க பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக, குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாஸ்கோ:

ரஷ்யாவில் 3 தினங்களுக்கு முன்பு, குராகின்ஸ்கி மாவட்டத்தின் ஷ்செடிங்கினோ கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் உள்ள அணை இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மேலும் பிற நான்கு அணைகள் இடிந்து விழுந்தன. இதில் 15 பேர் இறந்தனர். ஐந்து பேர் காணாமல் போயினர்.

இதையடுத்து அதிகாரிகள் சிசிம் தங்க சுரங்க கூட்டுறவு அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.


இடிந்து விழுந்த ஐந்து அணைகளும், தங்க சுரங்கத் தளத்தில் உள்ள நீரைத் திருப்பி விடுவதற்காக, அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. 

அணை இடிந்து விழுந்த விபத்தில், சுரங்க தள தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் நிறுவனத்தின் பொது இயக்குநரும், சுரங்க பொறுப்பாளரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளவில்லை.

விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் 80 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, சம்பவ இடத்தை குறித்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சுரங்க பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக, குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ரஷ்யாவின் சைபீரிய கிராஸ்நோயார்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News