செய்திகள்
ஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள் ( மாதிரிப்படம்)

ஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள்

Published On 2019-10-21 06:53 GMT   |   Update On 2019-10-21 06:53 GMT
ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ:

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த புயலால் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது மற்றும் சூறைக்காற்று சுழன்றடித்தது. 

மழை வெள்ளம் காரணமாக 140 இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஹகிபிஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 395 பேர் படுகாயமடைந்தனர். இந்த புயல் காரணமாக 11 பேரை காணவில்லை. 

79,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போதும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் மேலும் இரு புயல்கள் ஜப்பான் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

‘நியோகுரி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இவ்வாண்டின் 20வது புயலாகும். இந்த புயல் டோக்கியோ நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 21வது புயலாக ‘புலாய்’ எனும் புயல் வரும் 26 ம் தேதி இரவு ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய விளைவுகளையே இன்னும் சரிசெய்யாத நிலையில் மேலும் இரு புயல்கள் நெருங்கி வருவதால் ஜப்பான் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News