செய்திகள்
தாயீப் எர்டோகன்

பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறாவிட்டால் தலையை நசுக்குவோம்: குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை

Published On 2019-10-21 02:48 GMT   |   Update On 2019-10-21 02:48 GMT
செவ்வாய்க்கிழமை (நாளை) மாலைக்குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்காரா :

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள் பாதுகாப்பு மண்டலம் என வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து குர்துக்கள் வெளியேற வேண்டும் என துருக்கி கூறுகிறது.

இந்த நிலையில், சண்டை நிறுத்தத்தை மீறி குர்து படைகள் ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது. ஆனால் அதனை மறுத்துள்ள குர்துக்கள் துருக்கி ராணுவம்தான் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (நாளை) மாலைக்குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி குர்து போராளிகள் நடந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும்புவோம். குர்துக்களின் தலையை நசுக்குவோம்” என்றார். மேலும் அவர், குர்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்வை உருவாக்கவில்லை என்றால் துருக்கி தனது சொந்த திட்டங்களை செயல்படுத்தும் எனவும் கூறினார்.
Tags:    

Similar News