செய்திகள்
பிரிட்டன் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரெக்சிட் நடவடிக்கையை 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த பிரிட்டன் எம்.பி.க்கள் வாக்களிப்பு

Published On 2019-10-19 15:09 GMT   |   Update On 2019-10-19 15:09 GMT
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.
 லண்டன்:

பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

இதற்கு முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு உடன்பாடு இல்லாதபோதும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக 2016-ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும் 48.2 சதவிகிதம் மக்கள் வெளியேற வேண்டாம் எனவும் வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பில் தனது நிலைப்பாடு தோல்வி அடைந்தால் பதவி விலகுவதாக கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி, அவர் பதவியும் விலகினார். தெரசா மே பிரதமராக பதவியேற்றார்.

அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவது தொடர்பாக பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே தொடங்கினார். ஆனால், அவரது ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு இழுபறி நீடித்ததால் தெரசா மே பதவி விலகினார். போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.
 
இதற்கிடையே, பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம்.  அதற்குள் பிரிட்டன் பிரெக்சிட் செயல்திட்டங்களை முடித்து வெளியேறியாக வேண்டும்.

இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கடும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. எனவே, ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ நிச்சயம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறும் என போரிஸ் ஜான்சன் உறுதி அளித்து, அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டார். அவரது முயற்சியில் அடுத்தடுத்து சறுக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் புதிய பிரெக்சிட் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கரும் அறிவித்தனர்.



இந்த புதிய ஒப்பந்தத்தின்படி பிரிட்டன் வசம் முழு கட்டுப்பாடும் இருக்கும் என போரிஸ் ஜான்சன் கூறினார்.

சட்டம், எல்லைகள், வர்த்தகம் போன்றவற்றுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரிட்டன் வசம் முழு கட்டுப்பாடும் இருப்பதை இந்த புதிய உடன்படிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இரு நாடுகளின் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்த புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வரும். எனவே, இந்த உடன்படிக்கை மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பிரிட்டன் பாராளுமன்றம் இன்று கூடியது.

விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று 37 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதன்முறையாக கூடிய பாராளுமன்ற பொதுச்சபையில் புதிய உடன்படிக்கை தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுமார் 5 மணி நேரம் விவாதித்தனர்.



ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமீபத்தில் போரிஸ் ஜான்சன் செய்துள்ள புதிய உடன்படிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால் வெளியேறும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இதன்மீது எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

322 எம்.பி.க்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும் 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் லெட்வின் சட்டத்திருத்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.  வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சட்டமாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்துமாறு ஐரோப்பிய யூனியனை நான் வலியுறுத்த மாட்டேன் என பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News