செய்திகள்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு

Published On 2019-10-18 05:48 GMT   |   Update On 2019-10-18 05:48 GMT
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
லண்டன்:

பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனுக்கு உடன்பாடு இல்லாதபோதும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக 2016-ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதம் மக்கள் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்தனர். 

வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் பதவி விலகுவதாக கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி, அவர் பதவியும் விலகினார். தெரசா மே பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவது தொடர்பாக பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே தொடங்கினார். ஆனால் அவரது ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு இழுபறி நீடித்ததால் தெரசா மே பதவி விலகினார். போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

இதற்கிடையே பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம். அதற்குள் பிரிட்டன் பிரெக்சிட் செயல்திட்டங்களை முடித்து வெளியேறியாக வேண்டும். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கடும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. எனவே, ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ நிச்சயம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறும் என போரிஸ் ஜான்சன் உறுதி அளித்து, அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டார். அவரது முயற்சியில் அடுத்தடுத்து சறுக்கல் ஏற்பட்டது.



இந்த நிலையில்தான் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கரும் அறிவித்துள்ளனர். 

இந்த புதிய ஒப்பந்தமானது, பிரிட்டன் வசம் முழு கட்டுப்பாடும் இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். சட்டம், எல்லைகள், வர்த்தகம் போன்றவற்றுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரிட்டன் வசம் முழுக் கட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்வதாகவும், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், இரு நாடுகளின் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகுதான் பிரெக்சிட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இந்த ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பிரிட்டன் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. 

தற்போதைய நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு எம்பிக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை. எனினும், இந்த புதிய ஒப்பந்தத்திற்கு எம்பிக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றும், ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் எனவும் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஆனால், எதிர்க்கட்சிகளும், பிரதமரின் சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்களும் ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறி உள்ளனர். அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிக்க முடியாது என கூறியிருக்கிறது. எனவே, இந்த முறையும் பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டால், பிரெக்சிட்டை மூன்றாவது முறையாக ஒத்திவைக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் பிரதமர் கேட்க வேண்டிய சூழல் உருவாகும். அத்துடன், அக்டோபர் 31க்குள் பிரிட்டன் வெளியேறும் என கூறிய உறுதிமொழியையும் அவர் மீறுவதாக ஆகிவிடும். 

பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்த முறை பிரெக்சிட் நிராகரிக்கப்பட்டால், மிகவும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் எச்சரித்துள்ளார். 

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து உறுப்பு நாடுகளை கலந்து ஆலோசிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் கூறியிருக்கிறார்.

நாளை நடைபெற உள்ள பிரிட்டன் பாராளுமன்ற சிறப்பு அமர்வில் பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாராளுமன்ற முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
Tags:    

Similar News