செய்திகள்
துருக்கி அதிபர் மற்றும் ஐ.எஸ். அமைப்பினர் சிறைகளில் இருந்து தப்பிச்செல்லும் காட்சி

ஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு

Published On 2019-10-16 15:05 GMT   |   Update On 2019-10-16 15:05 GMT
சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் பிடியில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அவர்களே விடுதலை செய்வதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அங்காரா:

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. 

அந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராளிகள் குழு குர்திஷ்தான் என்ற தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது. 

இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் படையினருக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதையடுத்து, துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டம் தீட்டினார். 

ஆகையால், 'அமைதி வசந்தம்’ என்ற பெயரில் கடந்த 9-ம் தேதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான குர்திஷ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும், இந்த  தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குர்திஷ் போராளிகள் என இதுவரை 500-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குர்திஷ் போராளிகள் சிரிய அரசுப்படைகளின் உதவியை நாடியுள்ளனர். ரஷியா ஆதரவு பெற்ற சிரிய அரசுப்படைகள் துருக்கி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக எல்லையில் குவிக்கப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. 



இதற்கிடையில், துருக்கியின் ஆக்ரோஷ தாக்குதல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்போது போதிய கண்காணிப்பு இல்லாததால் அங்கிருந்து தப்பிச்சென்று வருகிறனர். 

தற்போதைய கணக்கீட்டின்படி, துருக்கி நடத்திவரும் தாக்குதல் காரணமாக இதுவரை 800-க்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறையை விட்டு தப்பிச்சென்று விட்டதாக குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இன்று ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் பாராளுமன்ற பிரிவினரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, சிரியாவில் கைது செய்யப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை வைத்து பேரம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைக்க உதவும் கருவியாக குர்திஷ் போராளிகள் பயன்படுத்துகின்றனர். 

மேலும், அவர்கள் தங்கள் பிடியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்து வருகின்றனர். ஆனாலும், வடக்கு சிரியாவில் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றியும் எவ்வித கவலையும் இல்லை என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் துருக்கியின் தாக்குதல் காரணமாக தப்பிச்செல்வது மிகுந்த கவலையை தருவதாக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Tags:    

Similar News