செய்திகள்
புயலால் ஏற்பட்ட பாதிப்பு

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய ஹகிபிஸ் புயல்- பலி எண்ணிக்கை 70-ஐ நெருங்கியது

Published On 2019-10-15 04:13 GMT   |   Update On 2019-10-15 04:13 GMT
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளது.
டோக்கியோ:

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலைத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் மழையால் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் வசித்த மக்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புயலால் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் வெளியான தகவலின்படி, ஹகிபிஸ் புயல் மற்றும் புயல் தொடர்பான விபத்துகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மூன்றாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 70ஐ நெருங்கி உள்ளதாக தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 பேரைக் காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News