செய்திகள்
சீன அதிபர் ஜின்பிங்

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை

Published On 2019-10-15 02:14 GMT   |   Update On 2019-10-15 02:14 GMT
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காட்மாண்டு :

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் போராட்டம் வெடித்தது.

ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை ரத்து செய்வதாக அறிவித்தது.

ஆனாலும் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரியும், ஹாங்காங் போலீசாரின் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தினார்.

இந்த போராட்டம் ஹாங்காங் நிர்வாகத்துக்கு மட்டும் இன்றி மத்திய அரசான சீனாவுக்கும் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், நெருப்புடன் விளையாடினால் சாம்பலாகிவிடுவீர்கள் என்றும் ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா பகிரங்கமாக எச்சரித்தது. ஆனால் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளர்கள் சீன அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.

குறிப்பாக கடந்த 1-ந் தேதி சீன தேசிய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து ஜனநாயக ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.

இந்த சூழலில் ஹாங்காங்கில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வழக்கம் போல் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் போலீஸ் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதோடு, சீன ஆதரவு கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நிலையில் சீனாவை யாராவது பிரிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என சீன அதிபர் ஜின்பிங் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜின்பிங், அந்நாட்டின் அதிபர் பித்யாதேவி பண்டாரி உடனான சந்திப்புக்கு பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது இதனை கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சீனாவுக்கு உட்பட்ட எந்தவொரு பிராந்தியத்தையும் சீனாவிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கும் எவரும் அழிந்து போவார்கள். அவர்களது உடல் தரையோடு தரையாக நசுக்கப்பட்டு, அவர்களின் எலும்புகள் பொடிப்பொடியாக்கப்படும்.

சீனாவின் பிளவுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு வெளி சக்திகளும் வெறும் மாயைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜின்பிங் எந்த ஒரு பிராந்தியத்தையும் குறிப்பிட்டு பேசவில்லையென்றாலும் இது ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை ஹாங்காங் போராட்டத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
Tags:    

Similar News