செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்

Published On 2019-10-12 06:31 GMT   |   Update On 2019-10-12 06:31 GMT
அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார். 

அதன்பின்னர் மேலும் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தினார்.  இது சீனாவின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் வர்த்தகப் போர் முற்றியது. 

இந்த வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு நேற்று தெரிவித்தார். 

இது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘அறிவுசார் சொத்துக்கள், நிதித்துறை சேவைகள், விவசாயிகள் நலன் தொடர்பாக மிகப்பெரிய ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன. இதற்கு முன்பு சீனா மேற்கொண்ட வர்த்தகத்தை விட மும்மடங்கு அதிகமாக உயர்த்தப்படவுள்ளது.        

இதுவரை சீனா 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை வாங்க முடிந்தது. அது தற்போது 40 முதல் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படவுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மிகப்பெரிய பிரச்சினைகளான நாணயம் மற்று அந்நிய செலாவணி விவகாரங்களிலும் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News