செய்திகள்
விமானம் விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியது- 7 பேர் பலி

Published On 2019-10-03 04:16 GMT   |   Update On 2019-10-03 06:59 GMT
அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
விண்ட்சார் லாக்ஸ்:

அமெரிக்காவின் ஹார்ட்போர்டு கவுண்டி, விண்ட்சார் லாக்சில் உள்ள பிராட்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரண்டாம் உலகப் போர் காலத்து விமானமான, போயிங் பி-17 ரக விமானம் நேற்று 13 பேருடன் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விமான நிலையத்தில் உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்து திசைமாறிய விமானம், விமான நிலைய பராமரிப்பு மையம் மீது மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். சிலர் பலத்த காயமடைந்தனர். நிலப்பகுதியில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளார். விமானத்தில் 3 விமானிகள் மற்றும் 10 பயணிகள் இருந்தனர்.  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர் லேமண்ட் இரங்கல் தெரிவித்துள்ளார்.



எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பிராட்லி சர்வதேச விமான நிலையம், இந்த விபத்து காரணமாக 3½ மணிநேரம் வரை மூடப்பட்டது. பின்னர் ஒற்றை ஓடுதளம் விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விமானம், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசும் பணியில் சிறப்புடன் செயல்பட்டிருந்தது. இந்த விமானம் கடந்த 1987ம் ஆண்டு பிட்ஸ்பர்க் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியதில் பலர் காயமடைந்தனர்.  அதன்பின் சரி செய்யப்பட்டு மீண்டும் விமானம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News