செய்திகள்
தய்யிப் எர்டோகன், இம்ரான் கான், மஹதிர் முஹம்மது

இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை முறியடிக்க துருக்கி, பாகிஸ்தான், மலேசியா புது முயற்சி

Published On 2019-09-30 13:41 GMT   |   Update On 2019-09-30 13:41 GMT
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தவறான கண்ணோட்டத்தை முறியடிக்க துருக்கி, பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகள் கூட்டாக தொலைக்காட்சி சேனல் தொடங்குகின்றன.
இஸ்லாமாபாத்:

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன், மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது ஆகியோர் ஒன்றாக சந்தித்துபல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வு, துவேஷம் மற்றும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கத்திய நாடுகள் நடத்திவரும் ‘இஸ்லாமோபோபியா’ என்ற
நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பதை இந்த சந்திப்பின்போது மூன்று நாடுகளின் தலைவர்களும் ஆமோதித்தனர்.

இஸ்லாம் மதத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் இந்த மனப்போக்கையும், கண்ணோட்டத்தையும் எதிர்த்து முறியடிக்க வேண்டுமானால் மூன்று நாடுகளும் சேர்ந்து ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அந்த சேனலில் ஒளிபரப்பட்டும் நிகழ்ச்சிகளின் மூலம் மேற்கத்திய நாடுகளின் பரப்புரைகளுக்கு பதிலடி தர இயலும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது, ‘இஸ்லாம் மதத்தைப் பற்றியும் முஸ்லிம்களை பற்றியும் வெளியாகும் பல செய்திகளும் பதிவுகளும் சரியானவை அல்ல, இஸ்லாத்தின் போதனைகளை அவை சித்தரிக்கவில்லை என்று நாங்கள் கருதுகின்றோம்.

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர். இஸ்லாம் என்பது வன்முறை சார்ந்த மதமாக இல்லாவிட்டாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பது உண்மைதான் என்பதை உலகம் ஏற்றுக்கொள்கிறது.



எனவே, இந்த குழப்பங்களை போக்கும் வகையில் இஸ்லாம் என்பது என்ன? என்பதை தெளிவுப்படுத்த ஒரு முயற்சி தேவை. இதன் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதம் என்ற பழிச்சொல் இஸ்லாம் மதத்தை வந்து சேராது.

எனவே, இதற்காக ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றை கூட்டாக தொடங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதற்கான பணிகளை மூன்று நாடுகளின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும்’ என்றார்.

இந்த கூட்டு முயற்சி தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில்,‘பி.பி.சி. தொலைக்காட்சியை போல் ஒரு ஆங்கில சேனலை உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களை முன்னிலைப்படுத்துவதுடன்  இஸ்லாமிய வரலாறு தொடர்பான அறிதலை ஏற்படுத்துவதற்கு திரைப்படங்களும், இணையத்தொடர்களும் தயாரிக்கப்படும்.

இந்த சேனலின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக மக்களை திரட்டும் தவறான அபிப்ராயங்கள் திருத்தப்படும். மதத்துவேஷம் என்றால் என்ன? என்பதை உரிய முறையில் புரிய வைக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News