செய்திகள்
துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன்

அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தை தொடரும் துருக்கி

Published On 2019-09-27 10:31 GMT   |   Update On 2019-09-27 10:31 GMT
ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகள் இருந்தாலும், ஈரான் உடனான எங்களது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகம் தொடரும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் உறுதியளித்துள்ளார்.
அங்காரா:

ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து ஈரான் மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா, கடந்த ஆண்டு மே மாதம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. அத்துடன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. 

ஈரானின் எரிசக்தி வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்தது.  இதற்கு ஈரானும் அவ்வப்போது பதிலடி கொடுத்தது. அதன் பின்பு அமெரிக்கா-ஈரான் இடையே பல முறை அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், ஈரானுடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகம் தொடரும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற  ஐ.நா பொது சபை மாநாட்டில் கலந்து கொண்ட துருக்கி அதிபர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஈரானிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதை துருக்கி நிறுத்தப்போவதில்லை. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் பல்வேறு பிரச்சனைகளை துருக்கி எதிர்கொண்டது. 

ஆனால் குறிப்பாக இந்த விவகாரம் மட்டுமின்றி பிற விவகாரங்களிலும் ஈரானுடனான எங்கள் உறவை தொடர்வோம். மேலும் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்வோம்” என்றார்.

Tags:    

Similar News