செய்திகள்
போயிங் நிறுவனம்

இருவேறு விமான விபத்துகளில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி - போயிங் நிறுவனம் அறிவிப்பு

Published On 2019-09-24 20:32 GMT   |   Update On 2019-09-24 20:32 GMT
இருவேறு விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கப்படுமென போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தயாரித்த ‘‘போயிங் 737 மேக்ஸ்’’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.

இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு விபத்துகளிலும் விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ‘‘போயிங் 737 மேக்ஸ்’’ ரக விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டன.இதற்கிடையே, விமானத்தின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறி போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 100 வழக்குகள் தொடுக்கப்பட்டன.1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்காக சுமார் ரூ.350 கோடியை போயிங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் ஒதுக்கியது. இந்த நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் (ரூ. 1 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரம்) இழப்பீடு வழங்கப்படுமென போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News